-உதயன் ஆசிரியர் தலையங்கம் 07 பெப் 2010-
அகில இலங்கை இந்து மாமன்றம் முக்கிய விடயம் ஒன்றை வடக்கு மாகாண ஆளுநர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியிடம் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியி ருக்கின்றது. யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரை அதன் உள்ளக பிரதான முக்கிய வீதிகளில் ஒன்று யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி,யாழ்ப்பாண நகரத்துக்குள்ளேயே மிக ஒடுக்கமானகுறுகியவீதி இதுதான் என்று கூறுமளவுக்கு அது உள்ளது.
சுமார் நூற்றாண்டுகளுக்கு மேலாக அதே விசாலத்தில்தான் அது உள்ளது. மக்கள் தொகைப் பெருக்கம்,சனப்புழக்கம், வாகன எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற விரிவடைந்துவரும் பிரச் சினைகளுக்கு முகம்கொடுக்கும் விதத்தில் அது மாற்றமடைய வில்லை என்பது உண்மையே.
கடந்த கால உள்நாட்டு யுத்தத்தினால் போதிய அபிவிருத்தி, வளர்ச்சியின்றி நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடு கையில் பல தசாப்த காலம் பின்னுக்கு நிற்கும் இடங்களாகத் தமிழர் தாயகப் பிரதேசங்கள் நலிவுற்று கிடக்கின்றன.போர் முடிந்திருப்பதாகக் கூறப்படும் இத் தருணத்தில் தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி குறித்து சிரத்தையும் கவனமும் அதிகம் காட்டப்படுகின்றன. இந்த வகையில் பார்த்தால் பாரம்பரிய தமிழர் தாயகத்தின் சிரசு எனப் போற்றப்படும் யாழ் குடாநாட்டின் அபிவிருத்தி குறித்து முதலில் நோக்கப்டுவது தவிர்க்க முடியாதிரு க்கின்றது.
அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி,சமுதாய வாழ்க்கை வசதி மேம்பாடு என்ற விடயங்களை நோக்குவோமானால் போக்கு வரத்து வசதிகள் அது தொடர்பான கட்டு மானங்கள் போன்றவை பிரதானமானவையாகின்றன. அந்தவகையில் யாழ்.குடாநாட்டின் அபிவிருத்தி என்று பார்க் கையில்,யாழ் நகரின் மத்தியின் ஊடாகச் செல்லும்மாவட்டத் தலைநகரான யாழ்ப்பாணத்தின் நகரப் பகுதியையும்,பிரதான துறைமுகப் பகுதி யான காங்கேசன்துறையையும் இணைக் கின்ற பல்வேறு முக்கிய நகரப் பகுதிகள் ஊடாகச் செல் கின்ற”கே.கே.எஸ் வீதியின்’ விரிவாக்கமும்,விசாலிப்பும், மேம் படுத்தலும் தவிர்க்கமுடியாத முக்கிய விவகாரமாகக் கருதப் படுவதில் தப்பில்லை.ஆனால் அத்தகைய முயற்சியை யார் எடுப்பது,எப்போது எடுப்பது,எந்த வகையில் மேற்கொள்வது என்பதுதான் இங்கு முக்கியமானதாகும்.
“யுத்தம் முடிவடைந்துவிட்டது,இனி அபிவிருத்திதான்’என்ற ஏக எண்ணத்தில் காரியங்களைக் கொழும்பிலிருந்து பிராந் தியங்கள் மீது திணிக்கக்கூடாது என்பதை நெறிப்படுத்தி உணர்த் துவதற்கு இந்த கே.கே.எஸ்.வீதி விசாலிப்புத் திட்டம் தொடர் பான நடவடிக்கைகள் நல்ல உதாரணமாகும்.கே.கே.எஸ்.வீதி விசாலிப்புத்திட்டம் அவசியமானது என்றா லும் தவிர்க்க முடியாதது என்றாலும் அதனுடன் தொடர்புபட்ட பல பிரச்சினைகள் நேரடியாக சமூகப் பாதிப்புக்களைத்தரும் சில சிக்கல்கள் அங்கு உள்ளன என்பதை அகில இலங்கை இந்து மாமன்றம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
இந்த வீதி விஸ்தரிப்புத் திட்டத்தைக் கண்மூடித்தனமாக முன்னெடுத்தால் சுமார் இருபத்தியேழு இந்து ஆலயங்களும் பழம் பெரும் கலாசார சின்னங்களும் பாதிக்கப்படும் அல்லது அழிக்கப்படும் ஆபத்து உள்ளது என்பதை இந்து மாமன்றம் வடக்கு மாகாண ஆளுநருக்கு வேதனையுடன் சுட்டிக்காட்டியி ருக்கின்றது.
யாழ்.நகருக்கு உள்ளேயே வண்ணை வைத்தீஸ்வரன் கோயில்,சாந்தையர் மடம் பிள்ளையார் கோயில்,சிவ தொண்டன் நிலையம்,மகாத்மா காந்தி,சுவாமி விவேகானந்தர் போன்றோர் உரை நிகழ்த்தியவரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் இந்துக் கல்லூ ரியின் பிரார்த்தனை மண்டபம்,நாச்சிமார் கோயில் போன்ற வையும், கில்னர் மண்டபம் போன்ற பிற முக்கிய கலாசார மையங் களும் கூட நேரடியாகப் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.
இவ்வாறு வரலாற்றுத் தொன்மையும், சமூக நெருக்கமும் கொண்ட இடங்கள் தொடர்பான விடயங்களில் தீர்மானங்கள் எடுப்பது சமுதாய உணர்வைச் சீண்டிப்பார்க்கும் வேலையாகவும் கூட அமைந்துவிடலாம். எனவே,இத்தகைய விடயங்களில் ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்பட முன்னர் பல முக்கிய அம்சங் களையும் உள்வாங்கிக் கொள்வது அவசியமாகும்.
யாழ். நகரத்தைப்பொறுத்தவரை யாழ்.மாநகர சபையின் நிர்வாகத்துக்கு இப் பிரதேச மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு நிர்வாகம் உள்ளது. யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேச விடயத்தில் தீர்மானம் எடுக்கும் தார்மீகப் பொறுப் பையும், தகைமையையும், தகுதியையும் அது கொண்டிருக்கின்றது.
ஆனால் அதற்கு வெளியிலுள்ள பிரதேசங்களில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி அமைப்புகள், மாகாண சபை போன்றவை மக்களைப்பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்திருக்கவில்லை. போதாக்குறைக்கு நாடாளுமன்ற ரீதி யில் குடாநாட்டு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோரும் தமது தற்போதைய பதவிக்காலத்தின் அந்தத்தில் நிற்கின்றார் கள்.
எனவே,மக்களின் உணர்வுகளை உரசிப்பார்க்கும் இத்தகைய விடயங்களில் கண்மூடித்தனமாகஒரு தலைப் பட்சமாக அதி காரிகளும்,கொழும்பு ஆட்சிப்பீடமும்,அதன் கையாட்களும் முடிவு எடுப்பதைவிடுத்து இப்பிரதேச மக்கள் பிரதிநிதிகள் முடிவுஎடுத்து நடவடிக்கை மேற்கொள்ளக்கூடியதாக இவ் விடயத்தை அணுகுவதே பொருத்தமானது.
அது மாத்திரம் அல்ல,இத்தகைய விடயங்களில் மக்களின் உணர்வுகளைப் பாதிக்காமல் தேவையான இலக்குகளை எட்டக்கூடிய மாற்றுத்திட்டங்கள்,வழி வகைகளை குடாநாட்டின் அறிஞர்கள்,நிபுணர்கள், விடயமறிந்த தகைமைசாலிகள் கொண்டிருப்பர். இந்தப் பிரதேசத்தின் மக்கள்பிரதிநிதிகளே அவற்றை எல்லாம் உள்வாங்கி,பொருத்தமான தீர்மானத்தை எடுப்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அதுவே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்.

Posted in 





