தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட கொள்கை வேறுபாடு கருத்து மோதல் என்பவற்றின் காரணமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்களும்இ இருப்பவர்களும் மூன்று அணிகளாக பாராளுமன்றத் தேர்தலில் மோதும் நிலமை தோன்றியுள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதிலிருந்து உருவான தமிழ்த்தேசிய விடுதலைக்கூட்டமைப்பு மற்றும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியூள்ள தமிழ்க் காங்கிரஸ் என்பன தனித்தனியாக களமிறங்கியுள்ளன.
தமிழினத்தின் தாயகமான வடகிழக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம்இ வன்னி ,திருமலை ,மட்டக்களப்பு ஆகிய மொத்தம் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பும் நேரடியாக மோதுகின்றன. அதே நேரம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் மாத்திரமே களமிறங்கியுள்ளது.
அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு ஒரு வாரம் முடிவதற்குள்ளேயே வடகிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு வேட்பாளர்களை நிறுத்த முடிந்திருப்பது அரசியல் நோக்கர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
ஆரம்பத்திலிருந்து துடிப்போடும் முனைப்போடும் செயற்படும் தன்மையை தமிழ்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு வெளிக்காட்ட விளைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர் அதற்கும் மேலாக தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் சமீப காலத் தளம்பல் போக்கிலும் சமரச அரசியல் நடவடிக்கைகளிலும்; தமிழ் மக்கள் அதிருப்தி கொண்டுள்ள சூழ்நிலையில் கூட்டமைப்புக்குப் பதிலாக ஓர் மாற்றுத் தெரிவாக தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு தன்னை நிலைநிறுத்த முனைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர்கள் அணியில் சட்டத்தரணிகள் – பட்டதாரிகள் கணிசமான அளவில் இடம்பெற்றிருப்பதும் முப்பதுகளின் ஆரம்பத்திலுள்ள இரு இளைஞர்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதும் மாற்று அரசியல் தலைமைத்துவம் ஒன்று அரசியல் களத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்பதன் எடுத்துக்காட்டாகவே கொள்ளப்பட வேண்டும் என்பதே உள்ளூர் அரசியல் நோக்கர்களின் கருத்தாக மேலெழத் தொடங்கியுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் நீண்டகால அரசியல் நடவடிக்கையாளர்களுமான ஸ்ரீகாந்தா சிவாஜிலிங்கம் ஆகியோருடன் தமிழ்த்தேசிய நீரோட்டத்தில் நீண்ட காலமக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்திருக்கும் சட்டத்தரணிகள் கனக. நமநாதன், பொன். பூலோகசிங்கம் ஆகியவர்களும் இணைந்து யாழ். மாவட்டத்தில் தேர்தல் களத்தில் குதித்திருப்பது வரவேற்கப்படும் நிகழ்வாகியுள்ளது.
ஸ்ரீகாந்தா ஓர் முன்னணி சட்டத்தரணி என்பது அவருடன் கருத்து முரண்பாடு கொள்ளும் அனைவரும் கூட ஏற்றுக்கொள்ளும் ஓர் விடயமாகும்.சிவாஜிலிங்கத்தின் தமிழ்த்தேசிய நடவடிக்கைகள் நன்கறியப்பட்டவை. எனவே தான் அரசியல் அனுபவம் மற்றும் சட்டப்பின்னணி என்பன இணைந்து கொண்டிருக்கும் இந்த அணி மெல்லியதாக இருந்தாலும் நம்பிக்கையூட்டும் ஒரு ஒளிக்கீற்று என்பது ஏற்கப்பட்டே ஆகவேண்டும்.
யாழ் நகரில் வசிக்கும் ஓர் முஸ்லீம் பெண்மணியை யாழ். மாவட்டத்தில் வேட்பாளராகத் துணிந்து நிறுத்தியிருப்பதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டுக்கு மேற்பட்ட செய்திகளை தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொண்டாக வேண்டும்.
மீண்டும் துளிர்த்திருக்கும் தமிழ் – முஸ்லீம் உறவுக்கு முகம்மது இஸ்மாயில் உம்மு ஷகீலா என்ற குடும்பப் பெண்ணின் தேர்தல் பிரவேசம் யாழ். மண்ணில் வாழ்த்துக் கூறுகிறதுஎன்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.
கடந்த காலத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பரந்த நிறுவனக் கூட்டமைப்புடன் கூடிய ஓர் வெகுசன இயக்கமாக தமிழ் மக்கள் மத்தியில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டத் தவறியுள்ளது.
பல்வேறு தரப்பட்ட திறமைசாலிகளும் புலமையாளர்களும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த நிலைமையிலும் கூட ஓர் பரந்த கூட்டுத்தலைமைத்துவத்தையும் சனநாயக அரசியல் பொறிமுறையையும் கொண்ட ஒரு மக்கள் இயக்கமாக தன்னை அது மாற்றிக் கொள்ளவில்லை.
இதன் விளைவாக தமிழ் மக்களின் தேசிய அரசியலில் அரச ஆதரவுக் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் காலூன்ற மும்முரமாக செயற்படுகின்றன. இந்நிலையில் கடந்த கால படிப்பினைகளை மறந்து விடாமல் ஓர் மக்கள் அமைப்புக்குள்ள குணாம்சங்களுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டவட்டமான ஓர் அரசியல் பாதையில் தமிழ்த் தேசிய அபிலாஷைகளை முன்னெடுப்பதற்கு தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு இத்தேர்தலை ஆக்கபூர்வமான ஆரம்பக்கட்டமாக பயன்படுத்த முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலவீனமடைந்துள்ள நிலையில் காலத்தின் சவாலுக்கு முகம் கொடுத்து ஒரு மாற்றுத் தெரிவாக தமிழ் மக்கள் மத்தியில் செயற்பட தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கு நல்ல சந்தர்ப்பம் காத்திருக்கிறது.
-யாழ்பாடி

Posted in 





