பி.பி.சி தமிழோசையின் யாழ்.குடாநாட்டிற்கான ஊடகவியலாளரான என். பரமேஸ்வரன் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினரிடம் முறையிட்டுள்ளார். நேற்றுக்காலை யாழ் வேம்படி வீதியில் அமைந்துள்ள சிறீலங்கா மக்கள் கட்சி அலுவலகத்தில் தான் பலாத்காரமாக பிடித்து தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தற்போது முன்னாள் அரச தலைவர் சந்திரிக்காவின் கணவர் விஜயகுமாரணதுங்கவின் சிறீலங்கா மக்கள் கட்சியின் அமைப்பாளராக இருப்பவர் மகிந்த திலக் குமார உடுகம. இவர் வன்னி மற்றும் யாழ்ப்பாணத்தின் அமைப்பாளராக இருக்கின்றார். அரச தலைவரினதும் அரச தலைவர் பாரியாரினதும் நெருங்கிய நண்பரான இவர் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து சிறீலங்கா மக்கள் கட்சிக்கு ஆதரவாளர்களைத் திரட்டுப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
வன்னியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களிடம் காணாமல் போன குடும்பஸ்தர்கள் மற்றும் பிள்ளைகளை தேடிக் கண்டுபிடித்துத் தருவதாகவும் நிவாரணம் தருவதாகவும் தெரிவித்து இவர் மக்களை கட்சியில் அங்கத்துவம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதுவரை சுமார் 28 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தலா 20 பெறுதியான விண்ணப்படிவங்களை பணத்தைச் செலுத்தி பெற்று பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ளனர்.
எனினும் தமக்கு நிவாரணம் பெற்றுத்தரவும் காணாமல் போன தமது பிள்ளைகள்மற்றும் கணவர்களைப் பெற்றுத் தரவும் எனக் கூறியே இந்த விண்ணப்படிவங்கள் பெறப்படுவதாக அவர்கள் கூறுகின்ற பொழுதிலும் மறுபுறத்தே மகிந்த திலக் குமார உடுகம தமது கட்சிக்கே 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கூறி வருகின்றார்.
இது தொடர்பான செய்திகள் அம்பலமாகியுள்ள நிலையில் நூற்றுக் கணக்கான மக்கள் தங்களது கணவன்மார் பிள்ளைகளைத் தேடிக் காத்துக் கொண்டேயிருக்கின்றனர். இந்த அலுவலகத்தில் நாள்தோறும் படையெடுத்துக் கொண்ட போதும் எந்தவொரு விமர்சனமும் கிட்டவில்லை.
இது தொடர்பாக சர்வதேச ஊடகங்களில் அம்பலமான போதும் உள்ளுர் ஊடகமான உதயன் நாளேட்டிலும் மூத்த ஊடகவியலாளரான பரமேஸ்வரன் சில செய்திகளை எழுதியிருந்தார். அத்துடன் இன்றைய தினம் வாசகர் திருமுகம் என்ற கருத்தின் கீழ் யாழ் குடாநாட்டில் நீதிமன்றம் மற்றும் காவற்துறை போன்றவற்றின பணிகள் முடங்கிப் போயிருப்பதாக கேள்வி எழுப்பி பரமேஸ்வரன் கட்டுரை ஒன்றையும் எழுதியிருந்தார். குறித்த கட்டுரையின் பிரதிகளை நேற்றுக்காலை 9 மணியளவில் அங்கு குழுமியிருந்த மக்களிடம் விநியோகிக்க முற்பட்ட வேளையிலேயே இவரை பலாத்காரமாக பிடித்து இழுத்துச் சென்று குறித்த அலுவலகத்தில் வைத்து கதவுகளை மூடியுள்ளனர்.
இவரை அடிக்க முற்பட்டதாகவும் அத்துடன் காணொலி படப்பிடிப்பிற்குட்படுத்தப்பட்டதாகவும் அவரது கைத்தொலைபேசி மற்றும் காணொலி பதிகருவி பறிக்கப்பட்டு சுமார் அரை மணிநேரத்திற்கும் மேலாக இருட்டறையில் தடுத்து வைத்திருந்ததாகவும் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் மேற்படி திலக் குமார உடுகமவின் சுயேட்சைக் கட்சியின் கீழ் போட்டியிடுகின்ற யாழ் முன்னணி எழுத்தாளரான செங்கை ஆழியான் எனப்படும் குணராசா அங்கு பிரசன்னமாகியிருந்த போதிலும் அவர் இதனைக் கண்டு கொள்ளாது திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்ததாக பரமேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும் பரமேஸ்வரன் காவற்துறையிருக்கு வழங்கிய தகவலை அடுத்து காவற்துறையினரின் தலையீட்டினால் சுமார் அரை மணி சேர இழுபறியின் பின்னர் இவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குடாநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளராகவும் பிபிசியின் தமிழ்சேவை மற்றும் டெயிலிமிரர் உள்ளிட்ட தெற்குப் பத்திரிகைகள் பலவற்றிற்கு ஊடகவியலாளராகப் பணியாற்றும் பரமேஸ்வன் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக குடாநாட்டில் ஊடகவியலாளராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Posted in 





